January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொதலாவல மருத்துவ பீடத்துக்கு 100 மாணவர்களை உள்வாங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு

கொதலாவல மருத்துவ பீடத்துக்கு 100 மாணவர்களை உள்வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மேற்படி திட்டத்துக்கு கல்வியை இராணுவ மயமாக்குவதற்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு சிவில் மாணவர்களை உள்வாங்கும் அதிகாரம் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஒன்றிணைந்த சம்மேளனம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 85 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்த கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு எதிரான மக்கள் இயக்கம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஒரு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.

2019 மற்றும் 2020 ஆம் கல்வியாண்டுகளுக்கான மாணவர்களை உள்வாங்கிக்கொள்ளும் செயற்பாடு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் முறையாக கையாளப்படாததால் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறத் தகுதி படைத்த பெருமளவிலான மாணவர்கள் தமது வாய்ப்பை இழந்துள்ளதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.