இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இசை நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் திரையரங்குகளைத் திறப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேசிய மரபுரிமை மற்றும் கிராமிய கலைகள் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, அவர் இதனை கூறினார்.
இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளதாக அவர் கூறினார்.
கொவிட் தொற்று பரவல் காரணமாக கலைஞர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கு உதவும் வகையில், இசை நிகழ்ச்சிகள் , திரையரங்குகள் மற்றும் தொவில்கள் போன்ற பாரம்பரிய சடங்குகளை அனுமதிப்பதிலும் கவனம் செலுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கொவிட் நெருக்கடியின் போது கலைஞர்களுக்கு போதுமான உதவிகளை வழங்க முடியாது போனதையிட்டு வருந்துவதாகவும் விதுர விக்ரமநாயக்க மேலும் கூறினார்.