January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாவிடின் விடுவிக்க வேண்டும்’: பாராளுமன்றத்தில் ரணில்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாவிட்டால் அவரை விடுவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே, அவர் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் இருந்தால் அவற்றை முன்வைத்து, வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தடுத்து வைத்திருப்பதென்றால், அவருக்கு எதிராக குற்றச்சாட்டு இருக்க வேண்டும் என்று இது ரிஷாட் பதியுதீன் பிரச்சினை மாத்திரமன்றி பாராளுமன்றத்தின் பிரச்சினை என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரிஷாட் மீதான் சாட்சியங்களை முன்வைக்க முடியுமா? இல்லையா? என்பதை சபாநாயர், சட்டமா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி, கேட்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சாட்சியங்கள் இருக்குமாயின் அதனை முன்வைத்து வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுங்கள். சாட்சி இல்லையென்றால் விடுவிக்கவும்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உறுப்பினர், இப்போது வழக்கொன்றின் விசாரணையில் தலையீடு செய்தது தொடர்பிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதற்கான சாட்சி இருந்தால், அதனையும் முன்வைக்க வேண்டும்.

எம்.பி. ஒருவர் வழக்கொன்றில் தலையிட்டால் அது பிரதான பிரச்சனையாகும்.

எனினும், குறித்த வழக்கு தொடர்பான சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் எம்.பி. தடுப்புக் காவலில் இருந்துள்ளார்.

அப்படி அவர் தொடர்பில் சாட்சியங்கள் இருந்தால், அவற்றையும் முன்வைக்க வேண்டும்” என்று ரணில் கேட்டுக்கொண்டுள்ளார்.