இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட 1,235 வீடுகள் இன்றையதினம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
கொவிட் தொற்று நிலைமையால் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன்படி பிரதான நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதான நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி காணொளி ஒளிபரப்பப்பட்டதுடன் பிரமுகர்களின் உரைகளைத் தொடர்ந்து சூம் தொழில்நுட்பம் ஊடாக திறப்பு விழா இடம்பெற்றது.
இதன்பிரகாரம் காலி மாவட்டத்தில் 50 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும், அட்டன் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும், நுவரெலியா, அக்கரபத்தனை பகுதியில் 267 வீடுகளும் திறந்துவைக்கப்பட்டன.
இதேவேளை வீடமைப்பு பிரதேசங்களில் இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாக வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.