November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2021 இல் அரச செலவீனம் 3300 கோடி ரூபாவால் குறைகிறது!

இலங்கையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச செலவீனங்கள் 3300 கோடி ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

அந்த ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கமைய ஜனாதிபதி மற்றும் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடுகளும் குறைக்கப்பட்டுள்ள அதே நேரம் தேசிய பாதுகாப்புக்காக பெருந்தொகை நிதி ஒதுக்கப்படவுள்ளது.

இதன்படி ஜனாதிபதியின் செலவினங்களுக்காக 2.78 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜனாதிபதியின் செலவீனங்கள் 6.6 பில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2020 இல் பாதுகாப்பு அமைச்சுக்காக 355 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டுக்கான இந்த தொகை 18 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒதுக்கப்பட்ட தொகை 373 பில்லியன் ரூபாயாகும்.

நாட்டின் பாதுகாப்புக்கு அடுத்ததாக பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகளுக்கு அதிக தொகை ஒதுக்கப்படவுள்ளது. இது 286.7 பில்லியன் ரூபாய் ஆகும்.

அத்துடன் நெடுஞ்சாலை அமைச்சுக்கு 250.1 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.  கல்வி அமைச்சுக்காக இந்த ஆண்டை விட 1.1 பில்லியன் ரூபாய் நிதி அதிகமாக ஒதுக்கப்படவுள்ளது.  அதன் தொகை  127.6 பில்லியன் ரூபாயாகும்.

சுகாதார அமைச்சின் செலவீனங்களுக்காக அடுத்த வருடத்திற்கு 153.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 6 பில்லியன் ரூபாய் குறைவாகும்.

இதற்கமைய அடுத்த வருடத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 2505.3 பில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.