பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஒக்டோபர் 15ஆம் திகதி பாகிஸ்தானுக்கு புற்றப்பட்டுச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான பிக் பாஷ் டி-20 லீக் தொடரில் விளையாடுவதற்கு சென்றுள்ளதால், பாகிஸ்தான் தொடரில் இலங்கை அணியின் தலைவியாக சகலதுறை வீராங்கனையான ஹர்ஷிதா மாதவி நியமிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
இதுகுறித்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் இந்திரானி ஆரியரத்ன கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துக் கூறுகையில், இந்தத் தொடர் நடைபெறுவது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இதன்படி, இருநாட்டு கிரிக்கெட் சபைகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முடிந்து, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தத் தொடரில் பங்குபற்றினால், இலங்கை மகளிர் அணி 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டித் தொடராக இது அமையும்.
அத்துடன், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக இருதரப்பு தொடரொன்றில் விளையாட பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
முன்னதாக, அடுத்த மாதம் இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாட திட்டமிட்டிருந்தது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு தொடர்களையும் இரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.