முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறாக வைத்திய நிபுணர்களுக்கு நிலவும் பற்றாக்குறையால் நோயாளர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாகவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வைத்தியசாலைக்கு நியமிக்கப்படவேண்டிய வைத்தியர்களின் எண்ணிக்கை 70 ஆக காணப்படுகின்ற போதிலும், தற்போது 35 வைத்தியர்களே பணியாற்றுவதாக அரச மருத்துவர்கள் சங்கத்தின் முல்லைத்தீவு கிளை தெரிவித்துள்ளது.
பொது மருத்துவம், சத்திரசிகிச்சை, குழந்தை மருத்துவம், பெண்ணியல் மற்றும் மகப்பேற்று மருத்துவம் ஆகிய ஒவ்வொரு விசேட துறையிலும் தலா இரண்டு வெற்றிடங்கள் நிலவுவதாக அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக சேவையிலிருந்த ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணர் ஒரு மாதத்திற்கு முன்பாக மேலதிக கற்கைநெறிக்காக வெளிநாடு சென்ற நிலையில், அதற்கான பதில் நியமனம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.