அரசியல் இலாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளைத் தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆரிய குளம் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் ஆரிய குள அபிவிருத்தியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி என்ற செய்தியைப் பார்த்ததாகவும் அந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் தேரர் பதிலளித்துள்ளார்.
நாக விகாரை மற்றும் இந்து மதஸ்தலத்துக்கு அருகில் சுற்றுலா மையத்தினை அமைப்பது தொடர்பில் அவர் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.
புனித பூமியில் சுற்றுலா ஹோட்டல் அமைப்பதை நிறுத்தும்படியும் இந்து மற்றும் ஏனைய மதத்தவர்கள் ஒன்றிணைந்து செயற்படக் கூடியவாறு ஒரு நல்லிணக்க மண்டபம் அமைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புனித பிரதேசம் என்பதால் குளத்தின் நடுவில் ஒரு தியான மண்டபத்தை அமைத்தால், அனைத்து மதத்தினருக்கும் உதவியாக இருக்கும் என்று தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.