July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆரிய குள அபிவிருத்தியில் மதச்சார்பு அடையாளங்களை உட்புகுத்தவில்லை’: யாழ். மாநகர முதல்வர்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச்சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை என்றும் உட்புகுத்தப் போவதில்லை என்றும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில் மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கமளிக்கும் போதே, அவர் இவ்வாநு தெரிவித்துள்ளார்.

செய்திகளில் தொடர்ச்சியாக தன்னைப் பற்றி எழுதி, தனது பெயரை மக்களின் மனங்களில் நிலைத்து நிற்க உதவும் ஊடகங்களுக்கும் சமூக வலைத்தள நண்பர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், யாழ். முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகை மற்றும் சமூக வலைத்தள எழுத்துக்கள் பிரதேச மக்களின் அபிவிருத்தியைப் பாதிக்காத விதத்தில் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதைத் தான் கண்டுகொள்ளப் போவதில்லை என்றாலும், அதன்மூலம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அபிவிருத்தியை பாதிக்கும் என்று மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

“ஆரியகுளம் அபிவிருத்தியில் எந்தவொரு மதச்சார்பு அடையாளங்களும் பிரதிபலிக்கப்பட இடமளிப்பதில்லை. மக்கள் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.

மக்கள் அச்சப்படும் வகையில் போலியான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்குமாறு ஊடகம் மற்றும் சமூக வலைத்தள எழுத்தாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

விகாராதிபதியால் அனுப்பப்பட்ட கடிதத்தில் புத்தர்சிலை பற்றி எதுவும் கூறவில்லை. மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது பற்றியே கூறப்பட்டிருக்கிறது” என யாழ். முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

இப்போது ஆரிய குளம் பற்றி முகநூலில் எழுதுபவர்கள் நாவற்குழியில் விகாரை கட்டப்பட்ட போது எங்கே சென்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.