January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வேட்புமனு தாக்கலின் போதே சொத்து விபரம் வெளியிடுவதற்கான பொறிமுறை அவசியம்’: தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்களுக்கான வேட்புமனுக்களைக் கையளிக்கும்போதே சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்தும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் நடத்தைவிதி சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவைச் சந்தித்தபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஊடக வழிமுறைகளை மீறும் ஊடகங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கே வழங்குமாறும் நிமல் புஞ்சிஹேவா கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் காலத்தில் வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு உரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு காரணங்களினால் தொடர்ச்சியாக காலதாமதமடைந்து வரும் மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்தன, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தின் கீழ் காணப்படும் வேட்பாளர்களின் வைப்புப் பணத்தை இரத்துச் செய்யும் நடைமுறை விரிவான திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு, பாராளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு நடமாடும் வாக்களிக்கும் முறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும், பார்வையற்றவர்கள் ப்ரெயில் முறையின் கீழ் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பணியாளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.