July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜிஎஸ்பி வழங்க முன்னர் மனித உரிமைகளின் நிலையை ஆராயவும்’: வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புகள்

இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க முன்னர் நாட்டின் மனித உரிமைச் சுட்டெண்ணை ஆராய வேண்டும் என்று வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் மீனவ மக்களின் வாழ்விடங்கள் மற்றும் தொழில் துறைகளை கடற்படையினர் தொடர்ந்தும் விடுவிக்காமல் இருப்பதாகவும் சிவில் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கில் சிறந்த விளைச்சலைத் தரக்கூடிய 2 ஆயிரம் ஏக்கர் வளமான விவசாய காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் இருப்பதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

“ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒரு நாட்டுக்கு வரிச் சலுகை வழங்குவதற்கு முன்னர் 27 நிபந்தனைகளுக்கு அந்த நாட்டு அரசு இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

இலங்கை அரசானது போர் நடைபெற்று 10 வருடங்கள் கடந்த நிலையில், காணாமல் ஆக்கப்படுதல், அரசியல் கைதிகள் விவகாரம், காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச் சட்டம் என்பனவுக்கு தீர்வு வழங்காமல் இருக்கிறது.

இன்னொரு புறம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ ஐநாவில் உரையாற்றும் போது, காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு எமது உறவுகள் காணாமல் போனவர்கள் அல்லர். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இதனை சர்வதேசம் நன்கு உணர வேண்டும்.

எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்” என்று சிவில் அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் விவசாய பூமி பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்கள் உண்ண வழியின்றி தமது நிலங்களையும் இழந்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

1984 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதி வாழ்க்கை நடத்திவரும் நிலையில், அரசாங்கம் தீர்க்கமான முடிவொன்றை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.