October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் 19: இலங்கையின் 5 மாவட்டங்கள் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் முழு நாடும் முடக்கப்படும் அபாயம் ஏற்படக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸை குறைப்பதற்காக 05 மாவட்டங்கள் தொடர்பாக உடனடியாக முடிவெடுக்குமாறு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் இந்த வைரஸ் கணிசமான அளவில் பரவி வருவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் மருத்துவர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ் மற்ற மாவட்டங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், இது குறித்து அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றார் ஹரித அலுத்கே.

அரசாங்கம் விரைவில் ஒரு முடிவை எடுக்கத் தவறினால், சமீபத்தில் கண்டறியப்பட்ட பேலியகொட கொவிட்-19 கொத்தணியை போன்று நாடு முழுவதும் அதிகளவான கொத்தணிகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.