இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா ஒக்டோபர் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
2 ஆம் திகதி இலங்கை வரும் இந்திய வெளியுறவுச் செயலாளர் 5 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார்.
இந்த விஜயம் நீண்டகால பலதரப்பட்ட உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்புக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளியுறவுச் செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் பயணங்களை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்பபம் இதுவாகும்.