July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழு வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து கேட்டறிந்துள்ளனர்.

கொழும்பிலுள்ள வெளிவிவாகர அமைச்சில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவிற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் வர்த்தகத்திற்கான பொதுப் பணிப்பாளர் நாயகமான சிரேஷ்ட ஆலோசகர் நிகோலாஸ் ஸைமிஸ் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியாவின் பிரிவுத் தலைவர் இயோனிஸ் ஜியோகாரகீஸ் -ஆர்கிரோபோலோஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் ஈடுபாடுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வரவேற்றுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார் என்று அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் உறவுகள் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உட்பட பரந்த அளவிலானதும் மற்றும் பரஸ்பரம் நன்மை பயப்பதுமாகும் என வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக இருப்பதால் 2020 இல் ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையின் நேர்மறையான பங்களிப்பையும், நாட்டின் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அதன் பங்களிப்பையும் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சருடனான கலந்துரையாடல்களில், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பலதரப்பட்ட ஈடுபாட்டை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம் தூதுக்குழு, தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதி செய்ததாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

This slideshow requires JavaScript.