இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாட்டில் உரிய சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா என தீவிரமாக ஆராயும்படி, கொவிட் ஒழிப்புச் செயலணி அந்தந்தத் துறையினரை வலியுறுத்தியுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒன்றுகூடுவதால் மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவது கட்டாயமென்று செயலணி அறிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்துக்கமைய , அரச மற்று தனியார் துறையினரைப் பணிக்கு அழைப்பது மற்றும் போக்குவரத்து சேவைகளில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் பொருளாதாரத் துறைகளின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பிலும், இந்தக் கூட்டத்தின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தொற்றுப் பரவல் நிலைமையைக் கட்டுப்படுத்தி வாழ்க்கை முறையைத் தொடர்வதற்காக, சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளை ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களிடம் தொடர்ந்து கொண்டு செல்லவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அதனிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தொடர்பான விரிவான கணக்கெடுப்பொன்றை நடத்துவதற்கும், குறித்த கூட்டத்தில் கொவிட் ஒழிப்புச் செயலணி தீர்மானித்துள்ளது.