July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பிரச்சனைகளுக்கு தீர்வின்றேல் தொழிலில் இருந்து விலகுவோம்”: சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கம்!

மலையக பெருந்தோட்ட அதிகாரிகளின் கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுமானால் பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம் என்று சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம் தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சந்தர்ப்பமொன்றை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா ரதல்லயில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் ஊடக பேச்சாளர் ரவீந்திர சேனரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தோட்ட முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள் உட்பட தோட்ட அதிகாரிகளின் பிரச்சனைகள் தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் உரிய கவனம் செலுத்தவில்லை. அத்துடன் தோட்ட அதிகாரிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரினோம். அதற்கும் பதில் கிடைக்கவில்லை என்று ரவீந்திர சேனரத்ன கூறியுள்ளார்.

தோட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் அவர்களால் பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அப்படி இருந்தும் பணி புறக்கணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நாம் ஈடுபடவில்லை. கௌரவமான முறையில் தொழிலில் ஈடுபட்டு வந்தோம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இனியும் பொறுமைக் காக்க முடியாது. நாளாந்தம் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. எனவே, எமது பிரச்சினைகள் தொடர்பில் செவிசாய்த்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பெருந்தோட்டத்துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உரப்பிரச்சினை, இதனால் தேயிலை உற்பத்தி 40 வீதத்தால் குறையும் அபாயம் உள்ளது. கிருமி நாசினிகள் இன்மையால் தேயிலை தோட்டங்களும் காடாகி வருகின்றன. இந்நிலையில் 1000 ரூபா சம்பளமும் வழங்க வேண்டும். உற்பத்தி குறையுமானால் பெருந்தோட்டத்துறையை எப்படி முன்னெடுப்பது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

தோட்ட அதிகாரிகள் தாக்கப்படும் மூன்றாவது சம்பவமும் பதிவாகியுள்ளது. எமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இல்லையேல் கடும் நடவடிக்கையில் இறங்குவோம் எனவும் சங்கத்தின் ஊடக பேச்சாளர் ரவீந்திர சேனரத்ன தெரிவித்துள்ளார்.