File Photo
முற்போக்கான அரசாங்கம் என்ற வகையில், பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்குள் குழந்தைகளுக்குத் தேவையான சேவைகள், வசதிகள் மற்றும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின் ஊடாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தொற்று நிலைமையை வெற்றிக்கொண்டு, சிறுவர்களின் உலகத்தை அவர்களுக்கு மிக விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கே எங்களுடைய ஒட்டுமொத்தத் திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
பெற்றோர் எப்போதும் கருதும் “அனைத்துக்கும் முன் குழந்தைகள்” என்ற எண்ணக்கருவே, இம்முறை உலக சிறுவர் தினத்தின் கருப்பொருளாக அமைந்திருக்கிறது. இதன்படி ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தின் ஊடாக உறுதியளிக்கப்பட்டுள்ளவற்றை யதார்த்தமாக்குவதே எனது நோக்கமென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வாழ்த்து
சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும். பெரியவர்களுக்கு அக்கடமையை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் ‘உலக சிறுவர் தினத்தை’ முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குழந்தைகளினாலேயே உலகம் அழகாகின்றது. அத்துடன் நாட்டினது எதிர்காலம் போன்றே உலகத்தின் எதிர்காலமும் குழந்தைகளிலேயே தங்கியுள்ளது. சிறுவர்களின் உலகம் பெரியோரது உலகத்தைவிட மிகவும் அழகானது. அந்த அழகை அவர்கள் எவ்வித தடையுமின்றி அனுபவிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெரியோர்களது கடமையாகும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதனை நன்கு புரிந்துக் கொண்ட ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சிறுவர்களின் உரிமைகளை உறுதிபடுத்துவதற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். நல்லொழுக்கம் மற்றும் ஆற்றல் நிறைந்த சிறுவர் தலைமுறை எதிர்காலத்தின் இருளை நீக்கும் என்பது எமது நம்பிக்கையாகும். சிறுவர் உரிமைகளை உறுதிபடுத்துவதற்கு நாம் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாகவும் உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.