July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வெவ்வேறு வடிவங்களில் வேறு தன்மைகளில் வீரியத்தை அதிகரித்துக் கொண்டு வைரஸ் பரவலாம்’

vaccination Centre

ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட வைரஸ் அதன் தன்மைகளில் அதே வடிவில் இப்போது பரவவில்லை. ஆகவே இனியும் வெவ்வேறு வடிவங்களில் வேறு தன்மைகளில் வீரியத்தை அதிகரித்துக் கொண்டு பரவலாம்.அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்,

டெல்டா வைரஸ் பரவலே நாட்டில் காணப்படுகின்றது. ஆகவே டெல்டா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நாடு பாதுகாப்பாக இருக்கின்றது என ஒருபோதும் கூற முடியாது. அதேபோல், இவ்வாறான வைரஸ் பரவல்களை உடனடியாக அழித்துவிட முடியாது என்பதை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளஅவர்,

நாடு திறக்கப்படுகின்றது என்பதற்காக சகலரும் வழமை போன்று கொரோனாவுக்கு முன்னர் செயற்பட்ட விதத்தில் செயற்பட முடியாது. இப்போது வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதென்றால் கடந்த ஒன்றரை மாதங்களாக கையாளப்பட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளே காரணமாகும்.

ஆகவே இனியும் சுகாதார வழிமுறைகளை அதிகமாக கையாள வேண்டியது நாட்டில் வாழும் சகல மக்களினதும் கடமையாகும். இது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், ஏனைய சகலரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். தடுப்பூசிகள் ஏற்றிக் கொள்வது தமது உயிர் பாதுகாப்பிற்கு இப்போது இருக்கும் ஒரே தெரிவாகும். ஆனால் தடுப்பூசியை ஏற்றிவிட்டோம் என்ற எண்ணத்தில் முகக்கவசம் இல்லாது,சுகாதார வழிமுறைகள் இல்லாது செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.