கொவிட் வைரஸ் பரவல் நிலைமைகள் இப்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட மீண்டும் வைரஸ் தொற்றுகள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய வைரஸ் தொற்றுகள்உருவாகலாம். எனவே இறுக்கமான சுகாதார வழிமுறைகளுடன் நாடு திறக்கப்பட வேண்டும் எனவும், இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் சகலரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் டெல்டா வைரஸ் பரவலின் எச்சரிக்கை நிலையில் இருந்து நாடு முழுமையாக விடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக நாடு தனிமைப்படுத்தல் ஊரடங்கின் கீழ் இருந்த போதிலும் கட்டுப்பாடுகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை. அத்தியாவசிய சேவைகள் என்ற பெயரில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டமை மற்றும் பொது ஒன்றுகூடல், நிகழ்வுகள் நடத்த தடைவிதிக்கப்பட்டமை என்பன சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளன என்றே கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறு இருப்பினும் நாட்டில் அச்சுறுத்தல் நிலையொன்று காணப்படுகின்ற நேரத்தில் தான் நாடு திறக்கப்படுகின்றது என்பதை சகலரும் தெரிந்து கொள்ள வேண்டும்.மீண்டும் வைரஸ் பரவும் அச்சுறுத்தல் நிலைமை சகலருக்கும் உள்ளது. தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என்பதற்காக சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது செயற்பட கூடாது. இப்போது நிலைமைகள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட மீண்டும் வைரஸ் தொற்றுகள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. தடுப்பூசிக்கு கட்டுப்படாத வைரஸ் தொற்றுகள் உருவாகலாம். ஆகவே சகலரும் சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி செயற்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.