January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது

விசேட பாராளுமன்ற அமர்வுகளுடன் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் 2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருப்பதுடன், ஐந்து நாட்களும் பாராளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று காலை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் அடுத்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் குறித்து ஆராயப்பட்டது. அதற்கமைய பாராளுமன்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து நாட்களுக்கான அலுவல்கள் பற்றியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் இதுவரை பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்களுக்கான விசேட நாளாக திங்கட்கிழமை சபை அமர்வுகளை கூட்டுவதனால் ஒக்டோபர் 4 ஆம் திகதி திங்கட்கிழமை முழு நாளும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 40 கேள்விகளுக்காக முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 வரையான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் முற்பகல் 10 மணிக்கு கூடவிருப்பதுடன், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள், நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.

ஒக்டோபர் 6ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது. ஒக்டோபர் 7ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை தேருநர்களை பதிவு செய்தல்(திருத்த) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

ஒக்டோபர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 2021 ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.

அத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 4.50 மணி முதல் 5.30 மணி வரையான நேரம் ஆளும் கட்சியினால் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும், புதன் கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.