இலங்கையின் கண்டிய சட்டத்தின்படி திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணுக்கு தனது தந்தையின் சொத்தில் எந்த உரிமையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (29) தீர்ப்பு வழங்கியுள்ளது.
தனது தந்தையின் மறைவின் பின்னர் அவரின் சொத்தில் உரிமை கோரிய அவரின் 3 வது மகள் ஒரு திகா திருமணமான சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்டுள்ளமை உறுதியானதையடுத்து அவருக்கு பரம்பரை சொத்திலிருந்து உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
கண்டிய சட்டத்தின் கீழ் இரண்டு வகையான திருமணங்கள் உள்ளன. திகா திருமணம் என்பது மணமகள் மணமகனின் வீட்டில் குடியேறுவது. பின்னா திருமணம் என்பது மணமகன் மணமகளின் வீட்டில் குடியேறுவது ஆகும்.
குறித்த பெண் 1957 இல் திகா திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்டுள்ளார். 1972 இல் அவரது கணவர் மரணமடைந்ததையடுத்து ஏறக்குறைய 15 வருடங்கள் அவரின் தந்தை இறக்கும் வரை தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது தந்தையின் வீட்டுக்கு திரும்பி வந்தவுடன் பின்னா திருமண சட்டத்தின் கீழ் தமக்கு சொத்தில் பங்கு இருப்பதாக குறித்த பெண் வாதிட்டுள்ளார்.
இதன்படி, அவர் தனது தந்தையின் சொத்தில் உரிமை கோரி உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்திருந்தார்.
எனினும் அவர் தனது தந்தையின் வீட்டுக்கு வந்ததன் பின்னர் தமது திகா திருமணத்தை பின்னா திருமணமாக மாற்றியிருக்கவில்லை. இதன் அடிப்படையிலேயே அவருக்கு சொத்தின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
கண்டிய சட்டத்தின்படி, திகா சட்டத்தின் கீழ் திருமணமான மகள் பொதுவாக தன் தந்தையின் சொத்தில் வாரிசுரிமை பெறமுடியாது. அதேசமயம் பின்னா திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் மகள் திருமணத்திற்குப் பிறகும் வாரிசுரிமை பெற முடியும்.