இலங்கையில் தற்போது நிலவும் சீனி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சீனி இறக்குமதிக்கான உரிமம் வழங்கும் முறை ரத்து செய்ய நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இதற்கமைய சீனி இறக்குமதிக்கான உரிமம் இன்றி சீனியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.
சீனி இறக்குமதியை மூன்று மாத காலத்திற்கு தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இந்த புதிய அனுமதியின் படி நாளை (01) முதல் தடை நீக்கப்படுகின்றது.
அத்தோடு தற்போது கொழும்பு துறைமுகத்தில் உள்ள சீனி கொள்கலன்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் படி இறக்குமதியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, பால் மா கொள்கலன்களை இறக்குமதி செய்யத் தேவையான அமெரிக்க டொலர்கள் தனியார் வங்கிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
தொடர்ந்தும் டொலர் வழங்கப்படாது தாமதிக்கப்பட்டால் இறக்குமதி செய்த பால் மா கொள்கலன்களை திருப்பி அனுப்ப வேண்டி ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டில் அரிசி விலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐந்து மாவட்டங்களிலும் அரிசி ஆலைகளை திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.