20 – 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் குறித்த வயதினர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது அவசியம் எனவும் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இதனை கூறினார்.
நாட்டில் 20 – 30 வயதுக்கு உட்பட்ட 3.3 மில்லியன் பேர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள தகுதி பெற்றுள்ள போதிலும் 1.5 மில்லியன் வரையானவர்களே இதுவரை தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் இதுவரை கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களில் 85 வீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் பல இளைஞர்கள் தமக்கு அச்சுறுத்தல் இல்லை என கருதி தடுப்பூசி ஏற்றிக் கொள்வதை தவிர்த்து வருவதாக அவர் கூறினார்.
நாட்டில் அதிகமாக நடமாடும் தரப்பினர் என்ற வகையில் கொவிட் தொற்றை காவும் பிரதான தரப்பினராக 20 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதில் இளைஞர்கள் உடனடியாக தடுப்பூசி ஏற்றிக் கொள்வது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.