February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு

இலங்கையின் 9 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட செயற்குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து மாகாண சபைகளும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளை நடத்திச் செல்வது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துதல், அவசியமான தொகுதிகளில் முன்கூட்டியே வாக்களிக்க சந்தர்ப்பமளித்தல் மற்றும் சிறப்பு வாக்குச் சாவடிகளை அமைத்தல் உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பாக பரிந்துரையை வழங்குமாறு சட்டமா அதிபரிடம் தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட செயற்குழு அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளது.