அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர் பீடத்துக்கு தமது நிலைப்பாட்டை விளக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் கட்சியின் உயர் பீடத்துக்கு விளக்கமளித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உயர் பீடம் விரைவில் கூடவுள்ளதோடு, அங்கு இவ்விடயம் கலந்துரையாடப்படவுள்ளதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், எம்.தௌபீக், நசீர் அஹமட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.