Photo: GMOA Media Unit
நாட்டை திறந்த பின்னர் ஐந்தாவது கொவிட் அலை உருவாகுவதனை தடுப்பதற்காக பொதுப் போக்குவரத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வது மிகவும் முக்கியம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அதற்காக உரிய பிரிவுகள் கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் ஊடகப் பிரிவின் உறுப்பினரான மருத்துவர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாள் ஒன்றுக்கு 4,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட காலப்பகுதியை நாங்கள் பார்த்தோம். தற்போது அது 1000 இற்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதேபோல, உயிரிழப்புகளும் அதிக அளவு குறைந்துள்ளது.
இந்த நிலையில், நாட்டை திறப்பதே சரியான தீர்மானமாக இருக்கும். ஒரு மாதத்திற்கு அதிகமாக நாட்டை மூடி வைத்ததால், அன்றாட உழைப்பில் வாழ்பவர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்தார்கள். இந்த நிலையில், நாட்டை திறந்தவுடன் மக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து சரியான முறையில் செயற்பட வேண்டும். இதில் பொதுப் போக்குவரத்து தொடர்பில் உரிய வேலைத்திட்டமொன்று பின்பற்றப்பட வேண்டும்.
அதுமாத்திரமின்றி, இரவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்துவதனை விடவும் இரவு நேர கேளிக்கை விடுதிகளை மூடி வைத்து மக்கள் கூடுவதனை தவிர்க்க வேண்டும்.
இரவு நேர பயணங்களை மேற்கொள்வதற்கு அதிக மக்கள் காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்துவதில் பயனில்லை. அதற்குப் பதிலாக இரவில் இளைஞர்கள் ஒன்றுகூடும் இரவு நேர கேளிக்கை விடுதிகளை மூடி வைப்பதற்கே அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டை திறப்பது குறித்து மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டல் நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இது அக்டோபர் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும்.