இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் செப்டம்பர் 28 ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம், காணாமல்போன நபர்கள், பொறுப்புக்கூறல் மற்றும் இழப்பீடு ஆகியவற்றைக் கையாளும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சில உயர் வழக்குகள் தொடர்பான கேள்விகளை உயர்ஸ்தானிகர் ஹல்டன், வெளிவிவகார அமைச்சரிடம் எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இலங்கையில் பிரிட்டனால் மேற்கொள்ளப்படும் வணிகங்களுக்கான மேம்பட்ட வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும், துறைமுக நகர அபிவிருத்தியில் காணப்படுகின்ற புதிய வாய்ப்புக்கள் குறித்தும் அமைச்சர் பீரிஸ் மற்றும் உயர்ஸ்தானிகர் ஹல்டன் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான, நீண்டகால, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நீடித்த உறவுளைப் பாராட்டியுள்ள அமைச்சர் பீரிஸ், பலனளிக்கும் மற்றும் உற்பத்திகரமான கூட்டாண்மையைத் தொடர்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.