July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஐரோப்பிய தூதுக்குழு திருப்தி; நீதி அமைச்சு

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் திருப்தியடைவதாகவும் எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் நியாயமான முறையில் பரிசீலனை செய்வதாகவும் ஐராேப்பிய ஒன்றிய தூதுக்குழு தெரிவித்ததாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐராேப்பிய ஒன்றிய தூதுக்குழு உறுப்பினர்களுக்கும் நீதி அமைச்சர் அலிசப்ரிக்குமிடையில் நீதி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நீதித்துறையின் முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஐராேப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கு நீதி அமைச்சர் அலிசப்ரி விரிவாக எடுத்துரைத்துள்ளார் எனவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பு தாெடர்பாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்;

ஐராேப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கும் ஜீ.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பாக எமது நாட்டின் தற்போதைய முன்னேற்ற நிலைமை தொடர்பாக மறு பரிசீலனை சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று ஐராேப்பிய ஒன்றிய தூதுக்குழு உறுப்பினர்களுக்கும் நீதி அமைச்சர் அலிசப்ரி ஆகியோருக்கிடையில் நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது ஐராேப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர், இலங்கை தொடர்பாக கொண்டிருக்கும் அணுகுமுறையை தெரிவித்ததுடன், நீதித்துறையின் தற்போதைய நிலைமை தொடர்பாக அமைச்சரிடம் கேட்டிருந்தனர்.

இதன்போது நீதி அமைச்சரினால் தற்போதைய நீதித்துறையில் மேற்கொள்ளப்படும் சட்டம் இயற்றுதல், நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குதல், வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக தீர்ப்பதற்காக தேவையான அடிப்படை வசதிகளை அதிகரிப்பது மற்றும் அரசியலமைப்பு திருத்தம் போன்ற விடயங்களும் அதன் சாதகமான நிலை தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஐராேப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர், நாட்டில் இடம்பெறுகின்ற சமகால நிலைமை மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொண்டு செல்லப்படுகின்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக வரவேற்றதுடன், இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் திருப்தியடைவதாகவும் எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் நியாயமான முறையில் பரிசீலனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர் என நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.