கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியிலும், நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையிலும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொண்டு வருகின்ற சூழ்நிலையிலும் வியாபார மாபியாக்காரர்கள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் விதமாக விலையேற்றங்களை செய்வதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நெல் ஆலை உரிமையாளர்கள்அதிகூடிய விலையில் அரிசியை சந்தைக்கு வழங்கினாலும், அரசாங்கம் இறக்குமதி செய்யும் அரிசியை 95 ரூபாவுக்கே வழங்குவோம். அப்போது அரிசி உரிமையாளர்கள் என்ன செய்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் கூறினார்.
நாட்டின் அரிசி பாவனைக்கு வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது என்ற காரணியுடன் விவசாயத்துறை அமைச்சராக நான் இணங்கமாட்டேன். அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் நான் அதனை எதிர்த்தேன்.
அதேபோல், நாட்டிற்குள் நெல் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தினேன். எனினும் விவசாயிகள் நெல்லை விற்க நடவடிக்கை எடுக்கவில்லை. விலையை கூட்டியும் அவர்கள் விற்கவில்லை. அவ்வாறான நிலையில் நாட்டு மக்களுக்கு அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் என்ன செய்வது. ஆகவே தான் அரிசியை இறக்குமதி செய்வது என்ற தீர்மானத்திற்கு வரவேண்டி ஏற்பட்டது எனக் கூறிய அவர்,
அரிசி உரிமையாளர்கள் ஊடகங்கள் முன்னிலையில் எதனையும் கூற முடியும். அரிசி விலையை ஏற்ற முடியும். ஆனால் நாம் இறக்குமதி செய்யும் அரிசியை 95 ரூபாவுக்கு வழங்குவோம்.அதன் பின்னர் அவர்கள் நிர்ணயித்த விலையில் அரிசியை எவரும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை.
அரிசி விலை குறித்த வர்த்தமானி அறிவித்தலை நீக்கியதோடு, அரிசி இறக்குமதியையும் முன்னெடுப்பதற்கு எடுத்த தீர்மானத்துக்கான காரணம், அரிசி ஆலை உரிமையாளர்களின் இந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்தவேயாகும்.
இதற்கு முன்னரும் பாரிய நெல் ஆலை உரிமையாளர்களுடன் மோதி அவர்களை மண்டியிட வைத்தோம்.இதனை நாம் மீண்டும் செய்து காட்டுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.