கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
குளியாப்பிட்டிய பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த, குளியாப்பிட்டிய – உனகீய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
இவர் ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குளியாப்பிட்டியவில் இவ்வாரத்தில் பதிவான இரண்டாவது கொரோனா மரணமாகும்.
இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 865 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 535 பேர் பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய தொற்றாளர்களாகும்.
அத்துடன் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் 398 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3682 வரை அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரையில் 7,153 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 3644 பேர் குணமடைந்துள்ளனர்.