February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்திய சீஐடியினர் மீது விசாரணை’: அமைச்சர் வீரசேகர

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மீது விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் இதுதொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என்று அறிவித்திருந்த நிலையில், விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைப்பூடு மோசடி சம்பவம் தொடர்பான பத்திரிகை செய்திகள் குறித்து, சில ஊடக நிறுவனங்களை சேர்ந்தோர் சீஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதுதொடர்பாக ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெற வேண்டாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், ஊடகவியலாளர்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், அறிவுறுத்தல்களை மீறி ஊடகவியலாளர்களை விசாரித்த சீஐடி அதிகாரிகளை விசாரிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.