July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தொற்று நோய் எப்போது முடிவுக்கு வரும்? – அமெரிக்க ஆய்வாளர்கள் பதில்!

“கொவிட் தொற்று நோயின் அவதானம் மிக்க கட்டம் கடந்துவிட்டதாக” ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ துறையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆராய்ச்சியாளர்கள் குழுவின் தரவுகளின்படி, கொவிட் தொற்று நோயின் மிக மோசமான கட்டம் நிறைவடைந்துள்ளதாக அவர் குறித்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களில் தொற்று நோயின் நிலவரம் தொடர்பில் பல்வேறு கணீப்பீடுகள் மூலம் செப்டம்பர் 22 ஆம் திகதி ஆய்வு முடிவுகளையும்  அனுமானங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக அமெரிக்காவின் கொவிட் தொற்று புள்ளி விபரங்களை கொண்டே அவர்கள் இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா-பென்சில்வேனியாவின் உயிரியல் பேராசிரியர் கத்ரீனா ஷியா, “இவை முன்னறிவிப்புகள் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்” என கூறியுள்ளார்.

அத்தோடு, ஒரு புதிய மாறுபாடு அல்லது வேறு எதிர்பாராத விடயங்கள் நடந்தால், கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் அடைந்துள்ள நீண்ட முன்னேற்றம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் ஒவ்வொருவரும் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதில் பங்கு வகிக்க முடியும். “நீங்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆபத்து கணிசமாகக் குறையும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.