July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தலைவர் நியமனத்திற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு!

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தலைவர் நியமனத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபை தவிசாளராக பதவி வகித்த தான், வட மாகாண ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை ஆட்சேபித்து, சாஹுல் ஹமீத் முஜாஹிரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆராயப்பட்ட போதே இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது வெற்றிடமாகியுள்ள பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு, புதிய தலைவர் ஒருவரை பெயர் குறிப்பிட்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி வரையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படக் கூடாது என்று, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை சாஹுல் ஹமீத் முஜாஹிரினால் தனது மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் உள்ளூராட்சி  ஆணையாளர், செயலாளர் உள்ளிட்டோரை 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக இருந்த சாஹுல் ஹமீத் முஜாஹிர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் கடந்த 13 ஆம் திகதி வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.