இலங்கையில் 75 வீதமான மக்களுக்கேனும் தடுப்பூசி ஏற்றாது நாட்டை முழுமையாக திறப்பது அச்சுறுத்தலானது. நாட்டை திறந்துவிட்டு தடுப்பூசி ஏற்றலாம் என கருதினால் மோசமான வைரஸ் பரவல் நிலையொன்று உருவாகும் என சுகாதார வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாடு திறக்கப்பட்டாலும் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இன்னமும் நாடு சிவப்பு எச்சரிக்கையில் இருந்து விடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலத்திலும் மக்களின் செயற்பாடுகள் முழுமையாக திருப்திகரமானதாக இருக்கவில்லை என்ற பொதுவான விமர்சனம் உள்ளது.
அதேபோல், பொதுப் போக்குவரத்தை மிக கவனமாக கையாள வேண்டியுள்ளது. பேருந்துகளில், புகையிரதங்களில் 50 வீதமான பொது மக்களுக்கே இடமளிக்க வேண்டும்.
நாட்டில் தற்போதும் டெல்டா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமை நீங்கவில்லை. நாடு முழுவதும் டெல்டா வைரஸ் பரவியுள்ள நிலையில் நாட்டில் 75 வீதமானோருக்கேனும் தடுப்பூசி ஏற்றாது நாட்டை திறப்பது அச்சுறுத்தலான நிலைமையாகும்.தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டமும் நாட்டை திறப்பதும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்,
ஆகவே தடுப்பூசி ஏற்றாது நாட்டை திறந்து வைரஸ் பரவலுக்கு மீண்டும் இடமளித்தால் மிக மோசமான தாக்கமொன்று உருவாகும்.எப்போதுமே நாம் ஏனைய நாடுகளை உதாரணமாக கொண்டு செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், அச்சுறுத்தல் நிலையை நாம் கடக்கவில்லை.
சிவப்பு எச்சரிக்கை நிலை குறைவடைந்துள்ளதே தவிர, எச்சரிக்கை நிலையில் இருந்து நாம் இன்னமும் விடுபடவில்லை என இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.