இலங்கை தலவத்துகொட பகுதியில் வீடொன்றில் தோஷம் கழிப்பதாக கூறி, வீட்டிலிருந்த தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படும் நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு முறைப்பாட்டுக்கு அமைய பன்னிப்பிட்டியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவத்துகொட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது தந்தையின் நோயை குணப்படுத்தும் நோக்கில், தனது நண்பரின் ஆலோசனைக்கு அமைய பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள தேவாலயமொன்றுக்கு சென்று அங்கு மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக கூறும் குறித்த நபரை சந்தித்துள்ளார்.
இதன்போது தந்தைக்கு தோஷம் பிடித்திருப்பதாக கூறியுள்ளதோடு, மே 22 திகதி நபரின் இல்லத்தில் பூஜை நடத்தி தந்தையை குணப்படுத்தி தருவதாக மாந்திரீகத்தில் ஈடுபடுபவர் அவரிடம் கூறியுள்ளார்.
அவ்வாறு பூஜை நடத்தியபோது குறித்த மாந்திரீகர், வீட்டில் தங்க ஆபரணங்கள் இருப்பது வீட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும், அதை தேவாலயத்திற்கு வழங்கிவிடும் படியும் வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளனர்.
அத்தோடு வீட்டில் இருந்த நவீன கணினியையும் பயன்படுத்துவது வீட்டிற்கு நல்லது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் 400,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 250,000 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினியை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் பின்னணியிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.