January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அவுஸ்திரேலியா இலங்கையைப் போன்று வறுமையில் வாடும்” – தொழில் அதிபர் எச்சரிக்கை

இலங்கை மற்றும் ஆர்ஜெண்டினாவை போன்று செல்வச் செழிப்பை இழந்து அவுஸ்திரேலியா வறுமையான நிலைக்கு வீழ்ச்சி அடையும் என அந்நாட்டு பணக்கார பெண்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

31 பில்லியன் டொலர் சொத்துக்கு சொந்தக்காரரான சுரங்க அதிபர் ஜினா ரைன்ஹார்ட், நாட்டின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார்.

நாட்டின் செல்வத்தை பாதுகாப்பதற்காக ‘சோசலிசத்தின் அழிவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளுக்கு’ எதிராக ‘எச்சரிக்கையாக’ இருக்க வேண்டும் என்றும் அவர் அவுஸ்திரேலிய மக்களை வலியுறுத்தினார்.

“அவுஸ்திரேலியா டுமாரோ” என்ற தலைப்பில் வெளியாக இருக்கும் வலதுசாரி சிந்தனையாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்கிய புத்தகத்திற்காக அவர் எழுதிய ஒரு அத்தியாயத்தில் இந்த எச்சரிக்கையை அவர் விடுதுள்ளார்.

ஒரு கட்டத்தில் இலங்கை அதன் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பிற விவசாய நடவடிக்கையால் செழிப்படைந்திருந்ததாக ஜினா ரைன்ஹார்ட் எழுதியுள்ளார்.

எனினும், தற்போது மக்கள் பசி, பேச்சு சுதந்திரம், அதனால் ஏற்படும் கலவரங்கள், சொத்து சேதம், மகிழ்ச்சியற்ற தன்மை, பொலிஸ், இராணுவ நடிவடிக்கைகள் மற்றும் அதன் சோசலிசப் பாதையின் முடிவுகளுடன் போராடி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று, 1913 ஆம் ஆண்டில் உலகின் பத்தாவது பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்த ஆர்ஜென்டினா இப்போது அரசியல் ஸ்திரமின்மை, பணவீக்கம் போன்றவையால் 42 வீதம் வறுமையில் வாடுவதாக அவர் தனது அத்தியாயத்தில் எழுதியுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் நாட்டை மேம்படுத்துவதை விடவும் செய்தி நிகழ்ச்சி நிரலைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்

“அவுஸ்திரேலியா டுமாரோ” புத்தகத்தை “ஆலன் ஜோன்ஸின்” தயாரிப்பாளர் ஜேக் த்ரூப் உருவாக்கியுள்ளார். பல கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் குயின்ஸ்லாந்து எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கிரிசாஃபுலி மற்றும் ACT எதிர்க்கட்சித் தலைவர் எலிசபெத் லீ ஆகியோரின் கட்டுரைகளும் இந்த நூலில் அடங்குகின்றன.