இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐவரடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, வர்த்தகத் துறைசார் பிரதிநிதிகளுடன் திங்கட்கிழமை (27) சந்திப்புகளை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுகீஸ்வர குணரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதிவரை கொழும்பில் தங்கியிருந்து தமது மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவில் வர்த்தகம் மற்றும் நிறைபேறான அபிவிருத்தி தொடர்பான ஆலோசகர் நிக்கோலாவோஸ் ஸைமிஸ், ஐரோப்பிய வெளியக சேவையின் தெற்காசிய பிராந்திய பிரிவின் தலைவர் ஐயொனிஸ் ஜியோக்கரகிஸ் அர்ஜிரோபோலொஸ், ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஒருங்கிணைப்பாளர் கைடோ டொலரா, ஐரோப்பிய ஆணைக்குழுவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக விவகாரங்கள் சபையின் தலைவர் லூயிஸ் ப்ரற்ஸ் மற்றும் ஐரோப்பிய வெளியக சேவையின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அலுவலக அதிகாரி மொனிகா பைலெய்ற் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களினால் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக் கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டில் விண்ணப்பித்ததுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதாக வாக்குறுதியளித்து 2017 ஆம் ஆண்டில் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொண்டது.
எனினும் ஏற்கனவே வாக்குறுதியளித்தவாறு பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாமை மற்றும் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைவரங்களை சுட்டிக்காட்டி, இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு வருகை தந்துள்ளது.