January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை முடிவு!

இலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கவும், ஒரு இலட்சம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்யவும் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, செப்டம்பர் 2 அன்று அரிசிக்கு அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (27) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கமைய, சந்தையில் அரிசிக்கு ‘செயற்கை தட்டுப்பாடு’ ஏற்படாமல் தடுக்க 100,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அத்தோடு, பால் மா, சமையல் எரிவாயு, கோதுமை மா  மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது  குறித்து அமைச்சரவையில் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்கு  மத்திய வங்கியிலிருந்து தேவையான நிதியை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.