சுகாதார தொழிற் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் உரிய கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொவிட் கால விசேட கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை முழுவதும் அரச வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் அரைநாள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் இன்று (27) காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில், சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
சுகாதார ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நாட்டில் நிலவும் கொவிட் சூழ்நிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
“ஜூலை மாதத்தில் சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை நினைவுபடுத்த விரும்புகிறேன். இது அப்போது கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் நாட்டில் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்தை மோசமான நிலைக்கு இட்டுச் சென்றது” என்றார்.
எனவே, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மோசமாக மாற இடமளிக்காது பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நம்பிக்கை வெளியிட்டார்.