“கொரோனா வைரஸ் இன்று சமூகப் பரவலாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியையும் சுகாதார அமைச்சரையும் புகழ் பாடுவதனால் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்திவிட முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று ஆபத்து நிலைமைகளை எதிர்கொள்ள புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கொரோனா சுகாதார நெருக்கடிகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு கூறிய அவர் மேலும் பேசுகையில்,
“இன்று நாட்டில் கொரோனாத் தொற்று மிகவும் பாரதூரமான நிலைமையை உருவாக்கியுள்ளது. இது இரண்டாம் அலையா அல்லது மூன்றாம் அலையா என்றே தெரியவில்லை. எனினும், அது சமூகப் பரவலாக மாறியுள்ளது.
இவ்வாறான ஆபத்தான நிலையில் துரதிஷ்டவசமாக அரச தரப்பினர் ஜனாதிபதியையும், சுகாதார அமைச்சரையும் புகழ்பாடுவதனையே அவதானிக்க முடிகின்றது.
இலங்கையிலுள்ள தனிமைப்படுதல் நடவடிக்கைகளை நூறு ஆண்டுகள் பழமையான இரண்டு சட்டங்களைக் கொண்டே கையாள்கின்றனர். புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனிநபர் பிரேரணை ஒன்றை நான் செயலாளரிடம் முன்வைத்தேன். இதில் சுகாதார வழிமுறைகள் சிலவற்றையும் முன்வைத்துள்ளேன். சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பொலிஸ் ஊரடங்கு எனப் பிறப்பிக்கப்படுகின்றன. இது நிலைமைகளைப் கையாளப் பயன்படுத்தப்பட்டாலும் சட்டத்துக்கு முரணானவையாகும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அரசுக்கு இதனை வலியுறுத்தியுள்ளது. எனவே, புதிய சட்டங்களை உருவாக்கி நிலைமைகளைக் கையாள வேண்டும்.
இதேவேளை, வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மட்டும் அப்பகுதியிலுள்ள வேறொரு கட்டடத்தில் இயங்குகின்றது. ஆனால், அந்த வெளிநோயாளர் பிரிவு இயங்கும் கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தண்ணீர், மலசலகூட வசதிகள் கூட இல்லாத நிலையே அங்கு காணப்படுகின்றது. எனவே, இதனை அரசு கருத்தில்கொண்டு உடனடியாக அவற்றை மறுசீரமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.