July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை மீது சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறைக்கு வலியுறுத்துவோம்’: பிரிட்டிஷ் தொழில் கட்சி

இலங்கை மீது சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை உருவாக்க வலியுறுத்துவதாக பிரிட்டிஷ் தொழில் கட்சியின் நிழல் வெளியுறவு அமைச்சர் லிசா நன்தி தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் தொழில் கட்சியின் வருடாந்த மாநாட்டில், தொழில் கட்சிக்கான தமிழர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பன பிரிட்டிஷ் தொழில் கட்சியின் அடிப்படைகள் ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் ஏதோ ஒரு இடத்தில் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அது எல்லா இடங்களிலும் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்துவதைப் போன்றதாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழில் கட்சிக்கான ஆதரவு அமைப்பு என்னும் முறையில், தொழில் கட்சிக்கான தமிழர் அமைப்பு, இலங்கை மீது சில கொள்கைகளை வகுத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளை ஓர் இன அழிப்பாக அங்கீகரித்தல், இலங்கையுடனான நெறிமுறையற்ற வர்த்தக முன்னெடுப்புகளை நிறுத்துவதுடன் வலிமை மிக்க கருவியாக வர்த்தக தடை நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும், இலங்கையின் வட கிழக்கு பகுதியினை தமிழர்களின் பாரம்பரிய தாயகமாகவும் தமிழ் மக்களை தேசிய இனமாகவும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினையும் அங்கீகரித்தல், தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய அடிப்படையில் சர்வதேச மத்தியஸ்துவத்துடனான ஒரு அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் போன்ற கோரிக்கைகளை தொழில் கட்சிக்கான தமிழர் அமைப்பு முன்வைத்துள்ளது.