2018 முதல் காணாமல் போன கோடீஸ்வர தொழிலதிபரும், பொறியியலாளருமான சமன் விஜேசிறி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சிலாபத்தைச் சேர்ந்த 63 வயதான தொழிலதிபரான இவர், 2018 செப்டம்பர் முதல் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த தொழிலதிபர் காணாமல் போனமை தொடர்பில் வழங்கப்பட்ட புகாரை அடுத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
ஒரு பட்டய பொறியியலாளராக ஐக்கிய நாடுகள் சபையுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவத்தை அவர் கொண்டிருந்தார். அத்துடன், உலக வங்கியின் இலங்கைக் கிளை மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சிலும் தொழில்நுட்ப பொறியியலாளராக அவர் பணியாற்றியிருந்தார்.
விஜேசிறி பல ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தார். அங்கு ஒரு ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனினும், அவர் பிங்கிரிய மற்றும் சிலாபம் பகுதியில் பல சொத்துக்களை வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் காணாமல் போன காலப்பகுதியில் சிலாபத்தில் வசித்து வந்துள்ளார். அத்துடன், தனது சொத்துகளைக் கவனிப்பதற்காக ஒரு பாதுகாப்பு ஊழியரையும் நியமித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, சமன் விஜேசிறி நாட்டை விட்டு வெளியேறியதாக தவறாக வழிநடத்த போலியான பயண ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள டி சில்வா தலைமையிலான குற்றப் புலனாய்வு பிரிவின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கோடீஸ்வர தொழிலதிபரின் சொத்துக்களைப் பெறுவதற்காகவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
இதனிடையே, குறித்த சம்பவம் தொடர்பில் கைதானவர்களில் தொழிலதிபரின் பாதுகாப்பு ஊழியரும், அவரது நண்பரும் அடங்குவர்.
அத்துடன், கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் சொத்துகளுக்கு உரிமை கோருவதற்காக சந்தேக நபர்களால் புனையப்பட்ட ஆவணங்கள் மற்றும் போலி பத்திரம் தயாரிக்கப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, சந்தேக நபர்கள் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அத்துடன், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் அறிவுறுத்தலின் கீழ் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.