January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து இலங்கை – பிரிட்டன் அமைச்சர்கள் கலந்துரையாடல்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரிட்டனின் தெற்காசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் விம்பிள்டனின் பிரபு அஹ்மத் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நியுயோர்க்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது இலங்கையில் வர்த்தகம், துறைமுக நகரம் மற்றும் ஏனைய துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறையை மீண்டும் ஆரம்பித்தல் ஆகியன குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன் புலம்பெயர் மக்களுடனான உறவுகள்  மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலால் தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு நிறுவனங்களால் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கணிசமான முன்னேற்றங்கள் குறித்து அஹ்மத் பிரபுவுக்கு அமைச்சர் பீரிஸ் விரிவாக விளக்கியதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பீரிஸ் அஹ்மத் பிரபுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதனை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.