2021 ஆகஸ்ட் மாத இறுதியில் 8 மாத காலப்பகுதியில் சுங்கத்தினால் அறிக்கையிடப்பட்ட 985 மில்லியன் டொலர் மாதாந்த சராசரி ஏற்றுமதிகளுடன் ஒப்பிடுகையில், 2021 ஜூலை- ஆகஸ்ட் காலப்பகுதியில் வங்கிகளினால் அறிக்கையிடப்பட்டவாறான ஏற்றுமதிப் பெறுகைகளின் மாதாந்த சராசரி மீளனுப்புதல்கள் 640 மில்லியனாக அமெரிக்க டொலர்களாக காணப்பட்டன.
இதற்கமைய இந்த இரண்டு எண் தொகைகளுக்குமிடையில் 345 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான குறிப்பிடத்தக்க இடைவெளியொன்று காணப்படுகின்றது.
இந்த நிலையானது ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதிப் பெறுகைகளின் 100 சதவீத மீளனுப்பல்கள் மீதான ஒழுங்குவிதியுடன் இணங்குகின்றனரா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது.
செலாவணி வீத அசைவுகள் மீதான தேவையற்ற ஊகங்களின் காரணமாக 2020 ஜனவரி தொடக்கம் 2021 ஜூலை வரையான காலப்பகுதியில் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதற்கான தயக்கமொன்று காணப்பட்டதால், உள்நாட்டு- வெளிநாட்டு
செலாவணிச் சந்தைக்கான உட்பாய்ச்சல்கள் மட்டுப்படுத்தப்பட்டதுடன், இந்த நிலையானது பின்னர் வங்கித்தொழில் துறையுடன் குறிப்பிடத்தக்க தொகையான 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணய வைப்பு நிலுவைகளைத் தோற்றுவித்தததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சில ஏற்றுமதியாளர்கள் தமது உள்ளீட்டுத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக தாழ்ந்த ரூபா வட்டி வீதங்களுடன் கடன்களைப் பெற்று இறக்குமதி செய்வதனை மிகவும் இலாபம் தரத்தக்க வழிமுறையென கண்டறிந்தமை உள்நாட்டுச் சந்தைக்கு மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்றுமதிப் பெறுகைகளின் 100 சதவீத மீளனுப்புதலும் 100 சதவீத மாற்றுதலும் காணப்பட்டிருக்குமாயின், உள்நாட்டுச் சந்தைக்கான மாதாந்த ஏற்றுமதி வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சல் 985 மில்லியன் டொலர் பெறுமதியாக விளங்கியிருக்கும் வேளையில், 1,670 மில்லியன் பெறுமதியான இறக்குமதிகள் மீதான சராசரி செலவினத்துடன், 685 மில்லியன் டொலர் பெறுமதியான மாதாந்த சராசரி இடைவெளியினையே ஏற்படுத்தியிருக்கும் என்றும் மத்திய வங்கி விளக்கமளித்துள்ளது.