July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்குமா?: இன்று எடுக்கப்படவுள்ள தீர்மானம்!

பால் மா, கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு அது தொடர்பான நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு அதற்கான அனுமதியை வழங்கத் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

எனினும் இது தொடர்பில் அமைச்சரவையே இறுதி முடிவெடுக்க வேண்டும் என்பதனால், வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் தீர்மானம் குறித்த பரிந்துரை, இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

இதன்போது அந்தப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குவதா? இல்லையா? என்று அமைச்சர்கள் தீர்மானிக்கவுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவில், பால் மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாயினாலும், கோதுமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாயினாலும், சீமெந்து மூடையின் விலையை 50 ரூபாயினாலும் அதிகரிப்பதற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க அந்தக் குழு தீர்மானித்தது.