சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் வெள்ளைப்பூடு மோசடி சம்பவம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி, அமைச்சரிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள், நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தாக வர்த்தக அமைச்சு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
வெள்ளைப்பூடு கொள்கலன்கள் இரண்டை சதொச நிறுவனம் வேறு தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போது, நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் அது தொடர்பான விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் மற்றும் தன்னை அமைச்சர் பந்துல குணவர்தன அச்சுறுத்தியதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்றும், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்தார்.
இதன்படியே அமைச்சரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.