சந்தேகத்திற்கிமான வட்ஸ் அப் குழுவொன்று தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்து வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்று பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ‘வாட்ஸ்அப்’ குழு ஒன்று தொடர்பாக தொடர்பாக மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘இன்டர் ஸ்கூல்’ என்ற வாட்ஸ்அப் குழு ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையது என்றும், அந்தக் குழுவில் சேர்ந்த பிறகு குழுவிலிருந்து வெளியேற முடியாது என்றும், இவ்வாறான வட்ஸ் அப் குழு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துக் கூறியுள்ள பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ, சந்தேகத்திற்கிடமான வட்ஸ் அப் குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவது வழமையானது என்றும், ஆனால் குறித்த வட்ஸ் அப் தொடர்பில் வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.