அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி கிராமம் பகுதியிலுள்ள மலைகளிலுள்ள காடுகளின் மரங்களை வெட்டி தீயிட்டு காடழிப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேநேரம், இந்த காடழிப்பு நடவடிக்கைகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உமரி கிராமத்தில் இருக்கும் இந்த கற்பாறைகளுடனான காட்டுபகுதி அரச காணிகள் ஆகும்.
களப்பு மற்றும் வட்டிகுளம் பகுதியை அண்மித்த பகுதிகளிலுள்ள கிராமங்களிலுள்ள இந்த கற்பாறைகளான காட்டு பகுதியின் காடுகளின் மரங்களை சிலர் வெட்டி அதனை தீயிட்டு எரித்து அழித்து நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை சில வாரங்களாக மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், உமரி கடற்கரை பகுதியிலுள்ள சிலர் தமது சொந்த காணிகளை தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்துவிட்டு, தற்போது தாங்கள் குடிமனைகளை கட்டி சேனைப்பயிர் செய்கை செய்ய போவதாகவும் இதுவரை சுமார் 10 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு ‘இந்த கற்பாறையுடைய காட்டில் எவ்வாறு பயிர் செய்ய முடியும். எனவே பயிர் செய்கை என்ற பெயரில் சிலர் இந்த நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு’ அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.