பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், இறைவனை நிந்திக்கும் விதமாகவும் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், இதன்படி இவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறும் கோரியே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரே இந்த முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
ஞானசார தேரர் அண்மையில் சிங்கள தனியார் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந்த நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன், அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான கருத்தைத் தெரிவித்த ஞானசார தேரரைக் கைது செய்ய வேண்டும் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவைச் சந்தித்தும் பேசியுள்ளோம். ஞானசார தேரருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியதுடன் அதற்கான துரித நடவடிக்கை எடுக்கப் பொலிஸாரைப் பணிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு திரும்பியவுடன் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இது தொடர்பாக அவரிடம் தெரிவிப்போம் என்றும் குறித்த முஸ்லிம் எம்.பி தெரிவித்துள்ளார்.