November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் கற்பிக்க போவதில்லை” – இலங்கை ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்!

இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், ஆசிரியர்கள் தங்கள் சம்பள பிரச்சினை தீர்க்கப்படும் வரை கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள் என ஆசிரியர் சங்கங்களின் பிரதான தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வெல பன்னசேகர தேரர் இதனை தெரிவித்தார்.

பாடசாலைகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பாக அல்லது பரிட்சைகளை நடத்துவதற்கு முன்பு தங்கள் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமது பிரச்சினைகளை தீர்க்காது ஒக்டோபர் 6 ஆம் திகதி 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 5,000 பாடசாலைகளை திறக்க அரசாங்கம் தயாராகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“எந்த அடிப்படையில் கல்வி அமைச்சின் செயலாளர் மீண்டும் வேலை செய்யச் சொல்கிறார். யார் இந்த நகைச்சுவைகளை ஏற்றுக் கொள்வது?” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

நாட்டை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே பாடசாலைகளை 4 கட்டங்களாக திறப்பதற்கான முன்னாயத்தங்களில் கல்வி அமைச்சு ஈடுபட்டு வருகின்றது.